72. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.