40. (நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.