19. அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.