40. உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.