20. (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.