10. நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்.