19. (நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.