1. நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.