ﮑ
                    ترجمة معاني سورة المائدة
 باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
            .
            
                            
            
    ﰡ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை சட்டமாக்குகிறான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடுபவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் வேட்டையாடிக் கொள்ளுங்கள். புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் நீங்கள் வரம்பு மீற உங்களைத் தூண்டவேண்டாம். நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.
                                                                        (தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பெயர் கூறப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்றது உங்களுக்கு விலக்கப்பட்டன. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளைக் கொண்டு (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு விலக்கப்பட்டன). இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கினேன். என் அருளை உங்கள் மீது முழுமையாக்கினேன். உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் நிர்ப்பந்திக்கப்பட்டால் (விலக்கப்பட்ட மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
                                                                        அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: "நல்லவை இன்னும் (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள், வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காகத் தடுத்தவற்றிலிருந்து (அவை இறந்தாலும்) புசியுங்கள். (அவற்றை ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கிடுவதில் தீவிரமானவன்.
                                                                        இன்று, நல்லவை உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமான் கொண்ட பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் ஆகுமானவர்களாகும் அவர்களுடைய மணக்கொடைகளை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால். (நீங்களும்) கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக, இரகசிய தோழிகளை ஆக்காதவர்களாக இருக்கவேண்டும். எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
                                                                        நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுகுங்கள், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளைக் கொண்டு) தடவுங்கள். இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் (கழுவுங்கள்). நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால் (குளித்து) நன்கு சுத்தமாகுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜல பாதையிலிருந்து வந்தால் அல்லது நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால், தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவுங்கள். உங்கள் மீது சிரமத்தை ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான். எனினும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தமாக்கவும், தன் அருளை உங்கள் மீது முழுமையாக்கவும் நாடுகிறான்.
                                                                        உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், "செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்'' என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூறுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
                                                                        நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நிலை நின்றவர்களாக, நீதிக்கு சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதமாக இருங்கள். அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
                                                                        நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்தான் "அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு'' என்று.
                                                                        நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தவர்கள்தான் நரகவாசிகள்.
                                                                        நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூறுங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வைக்கவும்.
                                                                        திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். அவர்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை அனுப்பினோம். "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால், ஸகாத்தை கொடுத்தால், என் தூதர்களை நம்பிக்கை கொண்டால், அவர்களுக்கு உதவிபுரிந்தால், அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால், நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிடுவேன், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை நுழைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார்.
                                                                        ஆகவே, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய உள்ளங்களை இறுக்கமானதாக ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மை) இடங்களிலிருந்து புரட்டுகிறார்கள். அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பாகத்தை மறந்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர அ(திகமான)வர்களிடமிருந்து மோசடியை (நீர்) கண்டுகொண்டே இருப்பீர். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக; புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்களை நேசிக்கிறான்.
                                                                        "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்த்தவர்கள்'' எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். அவர்கள் உபதேசிக்கப்பட்டதிலிருந்து ஒரு பகுதியை மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான்.
                                                                        வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும் பலவற்றை விட்டுவிடுவார். இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் ஒளி (அதாவது), தெளிவான ஒரு வேதம் உங்களிடம் வந்துவிட்டது.
                                                                        அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்தின் பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான். இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
                                                                        அல்லாஹ் அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவான்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியதை படைக்கிறான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
                                                                        யூதர்களும், கிறித்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்'' என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: "அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான்? மாறாக, நீங்கள் அவன் படைத்தவர்களில் உள்ள மனிதர்கள் ஆவீர். (அவனுடைய பிள்ளைகளல்ல.) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இன்னும், அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அவனளவில்தான் மீளுமிடம் இருக்கிறது.
                                                                        வேதக்காரர்களே! "நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை'' என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். அல்லாஹ், எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
                                                                        மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள். "என் சமுதாயமே! அந்நேரத்தில் உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூறுங்கள். அவன் உங்களில் நபிமார்களை ஆக்கினான், உங்களை அரசர்களாக ஆக்கினான், உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காதவற்றை உங்களுக்குக் கொடுத்தான்.''
                                                                        என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள். நீங்கள் உங்கள் பின்புறங்களில் திரும்பிவிடாதீர்கள். (புறம் திரும்பினால்) நஷ்டவாளிகளாகத் திரும்புவீர்கள்.
                                                                        (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான ஒரு சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்'' என்றனர்.
                                                                        (அல்லாஹ்வை) பயப்படுபவர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), "நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். அதில் நீங்கள் நுழைந்தால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை (தவக்குல்) வையுங்கள்'' என்று கூறினர்.
                                                                        "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழையவே மாட்டோம். ஆகவே, நீயும், உன் இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்'' என்று கூறினர்.
                                                                        "என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர் விஷயத்தில்) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் பிரித்திடு!'' என்று (மூஸா) கூறினார்.
                                                                        "நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!'' என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.
                                                                        (நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் செய்தியை உண்மையில் அவர்கள் முன் ஓதுவீராக. இருவரும் ஒரு "குர்பானி' (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) "நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்'' என்றார். (ஏற்கப்பட்டவர்) "அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்'' என்று கூறினார்.
                                                                        "நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.
                                                                        "என் பாவத்துடனும், உன் பாவத்துடனும் (இறைவன் பக்கம்) நீ திரும்புவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். (அவ்வாறு வந்தால்) நீ நரகவாசிகளில் ஆகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்'' (என்றும் கூறினார்).
                                                                        அவர் தன் சகோதரரை கொல்ல அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகினார்.
                                                                        தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக பூமியில் தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன் என் நாசமே! இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக இயலாமலாகிவிட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறி துக்கப்படுபவர்களில் ஆகிவிட்டான்.
                                                                        அதன் காரணமாக "எவன் ஓர் உயிரைக் கொலை செய்வதற்கு அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் செய்ததற்கல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றானோ அவன் மக்கள் அனைவரையுமே கொன்றவன் போலாவான். எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்'' என்று இஸ்ரவேலர்கள் மீது விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் வரம்புமீறுகிறார்கள்.
                                                                        அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள் இன்னும் பூமியில் குழப்பம் செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது அல்லது அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனை உண்டு.
                                                                        நீங்கள் அவர்கள் மீது ஆற்றல் பெறுவதற்கு முன்னர் (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பியவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
                                                                        நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனளவில் (சேர்ப்பிக்கின்ற) நன்மையைத் தேடுங்கள்! அவனுடைய பாதையில் போரிடுங்கள்!
                                                                        நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து பினைகொடுப்பதற்காக இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்(து அவற்றைக் கொடுத்)தாலும் அவர்களிடமிருந்து அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
                                                                        அவர்கள் நரகிலிருந்து வெளியேற நாடுவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேறுபவர்களாக இல்லை. அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
                                                                        திருடன், திருடி அவர்கள் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கரங்களை வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.
                                                                        எவர் தன் தீமைக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர் மீது பிழை பொறுப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
                                                                        நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவரை வேதனை செய்வான். தான் நாடியவரை மன்னிப்பான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
                                                                        தூதரே! "நம்பிக்கை கொண்டோம்'' என்று தங்கள் வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களிலிருந்தும் யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் தீவிரம் காட்டுபவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். (அவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவும் அதிகம் செவிமடுக்கின்றனர். (இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "நீங்கள் (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை எடுங்கள். நீங்கள் அதை கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் எதையும் (செய்ய நீர்) உரிமை பெறமாட்டீர். அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. அவர்களுக்கு, இம்மையில் இழிவுண்டு. இன்னும் மறுமையில் அவர்களுக்கு பெரிய வேதனையுண்டு.
                                                                        (இவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள், ஆகாத செல்வத்தை அதிகம் விழுங்குகிறார்கள். இவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.
                                                                        (நபியே! இவர்கள்) உம்மை எவ்வாறு தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்றாத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. பிறகு அதற்கு பின்னர் (புறக்கணித்து) திரும்புகின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
                                                                        நிச்சயமாக நாம் "தவ்றாத்'தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி கோரப்பட்டவர்களாகவும், அதன் மீது சாட்சியாளர்களாகவும் அவர்கள் இருந்த காரணத்தால் (அவர்களும் அதைக் கொண்டே தீர்ப்பளிப்பார்கள்). (பண்டிதர்களே!) மக்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கு அஞ்சுங்கள். என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பவர்கள்!
                                                                        அவர்கள் மீது அதில் விதித்தோம்: "நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்'' எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (பாவங்களின்) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்!
                                                                        அவர்களுடைய அடிச்சுவடுகளில் தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராக மர்யமுடைய மகன் ஈஸாவையும் தொடரச்செய்தோம். அவருக்கு ‘இன்ஜீல்'ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. (அதை) தனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக (ஆக்கினோம்).
                                                                        ஆகவே, இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்.
                                                                        (நபியே!) தனக்கு முன்னுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, அதைப் பாதுகாக்கக்கூடியதாக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். ஆகவே அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டே அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டு அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் எதில் முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை உங்களுக்கு அறிவிப்பான்.
                                                                        (நபியே!) அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களை அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான். நிச்சயமாக, மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்.
                                                                        அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதி கொள்கின்ற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?
                                                                        நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள். உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
                                                                        (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களில் (நட்புவைக்க) விரைபவர்களாகக் காண்பீர்! "ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றி அல்லது வேறு ஒரு காரியத்தைக் கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
                                                                        நிச்சயமாக நாங்களும் உங்களுடன்தான் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். அவர்களுடைய (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
                                                                        நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.
                                                                        உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்கள்தான். இன்னும் அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள்.
                                                                        எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் நேசிக்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.
                                                                        நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
                                                                        நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்ற காரணத்தினாலாகும்.
                                                                        வேதக்காரர்களே! "அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்'' என்று (நபியே!) கூறுவீராக.
                                                                        "அல்லாஹ்விடம் தண்டனையால் இதைவிட மிகக் கெட்டவனை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' எவர்களை அல்லாஹ் சபித்தானோ, அவர்கள் மீது கோபித்தானோ, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ, இன்னும் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்கள்தான் தகுதியால் மிகக் கெட்டவர்கள். இன்னும், நேரான பாதையிலிருந்து மிகவும் வழிதவறியவர்கள்.''
                                                                        அவர்கள் உங்களிடம் வந்தால் "நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். (எனினும் அவர்கள்) நிராகரிப்புடன்தான் (மனதில் வைத்து) திட்டமாக நுழைந்தார்கள். திட்டமாக அதனுடன்தான் வெளியேறினார்கள். அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.
                                                                        (நபியே!) அவர்களில் அதிகமானவர்களை பாவத்திலும், அநியாயத்திலும், ஆகாத செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக (நீர்) காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது!
                                                                        அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது.
                                                                        "அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டன. அவர்கள் கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிக்கப்பட்டுள்ளன. அவன் நாடியவாறு தர்மம் புரிகிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். அல்லாஹ், கலகம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.
                                                                        நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக அகற்றிடுவோம். இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக நுழைத்திடுவோம்.
                                                                        தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் அவர்கள் செய்பவை கெட்டுவிட்டன.
                                                                        தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான சமுதாயத்தை நேர்வழி செலுத்த மாட்டான்.
                                                                        (நபியே!) கூறுவீராக, "வேதக்காரர்களே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.''உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான சமுதாயத்தைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.
                                                                        நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
                                                                        திட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினோம், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை ஒரு தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) ஒரு வகுப்பாரை பொய்ப்பித்தனர், ஒரு வகுப்பாரை கொல்கின்றனர்.
                                                                        தண்டனை ஏற்படாது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுத்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
                                                                        "நிச்சயமாக அல்லாஹ், அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்'' என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: "இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். அவருடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.
                                                                        "நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் வேதனை அவர்களில் நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.
                                                                        (இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
                                                                        மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர வேறில்லை. இவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிபடுத்துகிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகின்றனர் என்று(ம்) கவனிப்பீராக.
                                                                        "அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் உரிமை பெறாதவற்றை வணங்குகிறீர்களா?'' என்று (நபியே!) கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.
                                                                        "வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.'' என்று (நபியே!) கூறுவீராக.
                                                                        இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூத் இன்னும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினால் சபிக்கப்பட்டனர். அது அவர்கள் மாறுசெய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலுமாகும்.
                                                                        அவர்கள் செய்த தீமையை விட்டு ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை உறுதியாகக் கெட்டு விட்டது!
                                                                        அவர்களில் அதிகாமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்புவைப்பதை (நபியே!) காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியன கெட்டு விட்டது. வேதனையில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
                                                                        அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
                                                                        (நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு பகைமையில் கடுமையானவர்களாக காண்பீர்! நிச்சயமாக நீர் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்களை நேசத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் மிக நெருங்கியவர்களாகக் காண்பீர்! நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளுமாக இருப்பதும், நிச்சயமாக அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள் என்பதும்தான் அதற்குக் காரணம்.
                                                                        தூதருக்கு இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்களை அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாகக் காண்பீர். "எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும்) பதிவு செய்!'' என்று கூறுகின்றனர்.
                                                                        "அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்தியத்தையும் நாங்கள் நம்பிக்கைகொள்ளாதிருக்கவும், எங்களையும் எங்கள் இறைவன் நல்ல மக்களுடன் சேர்ப்பதை நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும் எங்களுக்கு என்ன நேர்ந்தது?'' (என்று கூறுகின்றனர்).
                                                                        ஆகவே, அவர்கள் கூறியதன் காரணமாக, அதன்கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இது நல்லறம்புரிபவர்களுடைய கூலியாகும்.
                                                                        (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்ப்பித்தவர்கள் அவர்கள் நரகவாசிகள்தான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கிய நல்லவற்றை ஆகாதவையாக (ஹரமாக) ஆக்காதீர்கள்; வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்புமீறிகளை நேசிக்கமாட்டான்.
                                                                        அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
                                                                        உங்கள் சத்தியங்களில் வீணானதற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்தி (பின்னர் அதை மீறி)யதற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது அவர்களுக்கு ஆடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும், (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருப்பது (அவசியம்). நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்கு பரிகாரமாகும் இது. உங்கள் சத்தியங்களை காப்பாற்றுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், (ஜோசிய) அம்புகள் ஷைத்தானுடைய செயல்களில் உள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றி பெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்.
                                                                        நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகுபவர்களா?
                                                                        அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்; தூதருக்கு கீழ்ப்படியுங்கள்; (பாவங்களை விட்டு விலகி) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் (அறிவுரையை புறக்கணித்து) திரும்பினால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது தான் நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.
                                                                        நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை. (தடுக்கப்பட்ட உணவை தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, (பிறருக்கும்) நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை பயப்படுபவரை அல்லாஹ் அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
                                                                        நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் தான் கொன்றதற்கு ஒப்பான(தை பரிகாரமாக கொடுப்பதுதான் அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு தீர்ப்பளிப்பர். கஅபாவை அடைகிற பலியாக (அது இருக்கவேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) நோன்பால் அதற்குச் சமமானது (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
                                                                        (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனளிப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
                                                                        மக்களுக்கு புனித வீடாகிய கஅபாவையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை(யிடப்பட்ட பலி)களையும் கியாமாக (அடையாளமாக) அல்லாஹ் ஆக்கினான். அது, வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.
                                                                        நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
                                                                        தூதர் மீது கடமையில்லை (தூதை) எடுத்துரைப்பது தவிர. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
                                                                        (நபியே!) கூறுவீராக, "தீயது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! நீங்கள் வெற்றிபெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.''
                                                                        நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளியாக்கப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளியாக்கப்படும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன்.
                                                                        உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்.
                                                                        பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனை செய்கின்றனர். அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.
                                                                        "அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்.'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?
                                                                        நம்பிக்கையாளர்களே! உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி சென்றால் வழிகெட்டவர் உங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார். உங்கள் அனைவருடைய மீளுமிடமும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது. ஆகவே, (அவன்) நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.
                                                                        நம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் மரண சாஸனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்)உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிடில் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், "அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஓர் ஆதாயத்தையும் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே. நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்ய வேண்டும்.
                                                                        (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை ஏற்பட்டவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்பு சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு "அவ்விருவரின் சாட்சியத்தைவிட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு மீறினால்) அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில்தான் ஆகிவிடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
                                                                        அது, சாட்சியத்தை அதற்குரிய முறையில் கொண்டு (அவர்கள்) வருவதற்கும் அல்லது அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள், செவிசாயுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
                                                                        அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “நீங்கள் என்ன பதில் கூறப்பட்டீர்கள்?” என்று (அவர்களிடம்) கூறுவான். எங்களுக்கு அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள்.
                                                                        அல்லாஹ், “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதுமுள்ள என் அருளை நினைவு கூர்வீராக! என்று கூறிய சமயத்தை, நினைவு கூருங்கள்! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர், இன்னும் எழுதுவதையும் ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக! நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும்; பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வர, அவர்களில் நிராகரித்தவர்கள் இது தெளிவான சூனியம் தவிர வேறல்ல என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
                                                                        என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூறுவீராக! (அதற்கவர்கள்) நம்பிக்கை கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்.
                                                                        சிஷ்யர்கள் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் இறைவன், வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவதற்கு இயலுவானா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! (அதற்கு ஈஸா) “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார்.
                                                                        (அதற்கவர்கள்) அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கு, எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கு, நீர் எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் நாடுகிறோம் “என்று கூறினர்.
                                                                        மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்கள் மீது இறக்கு! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
                                                                        அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்கள் மீது இறக்குவேன். ஆகவே, பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காத வேதனையை நிச்சயம் நான் அவருக்கு கொடுப்பேன்.”
                                                                        அல்லாஹ் கூறும் சமயத்தை நினைவு கூறுங்கள்: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.
                                                                        நீ எனக்கு ஏவிய, “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியபோது நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.
                                                                        அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால்... நிச்சயமாக நீதான் மிகைத்தவன், ஞானவான்.”
                                                                        அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும், அவற்றின் கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள், அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான், அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றி.
                                                                        வானங்கள், பூமி, இன்னும் அவற்றில் உள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.