ﯬ
surah.translation
.
من تأليف:
عبد الحميد الباقوي
.
ﰡ
1. (நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
2. (தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகா கெட்டது.
3. இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே, (எதையும்) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
4. (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக் கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தான் (உமது உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்து கொள்வீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்?
5. அவர்களை நோக்கி, ‘‘வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்'' என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம்கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்.
6. (நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
7. இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள்'' என்று கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) ‘‘வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.''
8. மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்'' என்றும் கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) கண்ணியமெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளவில்லை.
9. நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான்.
10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்.
11. (எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.