ﯕ
surah.translation
.
ﰡ
ﭥ
ﰀ
ஹா, மீம்.
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
"இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்).
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; "இன்னு நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.
அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
(பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
ஃபிர்அவ்ன், ஹாமான், ஃகாரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ "(இவர்) பொய்யுiரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்; "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; "மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று.
மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்."
"என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?" என்றும் கூறினார்) அதற்கு "நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என ஃபிர்அவ்ன் கூறினான்.
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்."
"நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் 'ஆது', 'ஸமூது'டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
"என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
"அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது) அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
"மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) "அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்" என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
"(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்" (என்றும் அவர் கூறினார்).
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்;) "ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
"(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
"என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
"எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
"என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.
"நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
"என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
"எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்" (என்றும் அவர் கூறினார்).
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?" என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
(அப்போது) "நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்" என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
"இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
"உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகழ் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார் அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்ளவில்லை.
உங்கள் இறைவன் கூறுகிறான்; "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
(நபியே!) கூறுவீராக "என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்."
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
பிறகு அவர்களுக்குச் சொல்லப் படும்; "(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" என்று.
"அல்லாஹ்வையன்றி" (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்படும்); "அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
"இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
"நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்" (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்.
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.