ترجمة معاني سورة الطارق باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.