ﮖ
surah.translation
.
من تأليف:
عبد الحميد الباقوي
.
ﰡ
1. அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.
2. (நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹ்யி மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீர் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
3. (மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
4. இறந்த பின்னர் நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கிறான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கிறான். (இதை) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையாக கொதித்த நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். (இதை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
5. அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.
6. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.
7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும்,
8. (ஆகிய) இவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
9. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சொர்க்கங்களுக்குரிய வழியில் செலுத்துகிறான்.
10. அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.
11. நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரை) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். ஆகவே, (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம்.
12. மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன.
13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்.
14. அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கவனித்து வருகிறோம்.
15. (முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.
16. (மேலும்,) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் இதை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவுகூட), நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா?
17. அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்.
18. (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக.
19. மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உமது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிவு பெற்றே இருக்கும்!
20. (தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றன்.''
21. (இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிக தீவிரமானவன். (எனவே அவனது சூழ்ச்சி உங்கள் சூழ்ச்சியைவிட முந்திவிடும்)'' என்று கூறுவீராக. நிச்சயமாக நம் தூதர்(களாகிய வானவர்)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
22. நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
23. அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அநியாயம் செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்கள் அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம்தான் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
24. இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
25. (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
26. நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்து கொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சொர்க்கவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
27. தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப் போன்ற தீமையே! அவர்களை இழிவு வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
28. (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
29. (இதற்கு) ‘‘நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை அறவே நாங்கள் அறியவும் மாட்டோம்'' என்றும் கூறும்.
30. அங்கு ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
31. (நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
32. ‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக).
33. (அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில் ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உமது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.
34. (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக.
35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக.
36. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.
38. இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.''
39. எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
40. (திரு குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதை நம்பாத) இந்த விஷமிகளை உமது இறைவன் நன்கறிவான்.
41. (நபியே!) உம்மை பொய்யரென அவர்கள் கூறினால் (அவர்களை நோக்கி ‘‘நன்மையோ தீமையோ) என் செயல்(களின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செயல்(களின் பலன்) உங்களுக்குரியது. என் செயலில் இருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செயலில் இருந்து நான் விடுபட்டவன்'' என்று கூறுவீராக.
42. அவர்களில், உங்கள் வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்கள் என்று நீர் எண்ணி விட்டீரா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்து கொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
43. உம்மைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) எதையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.
45. (விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன்வர மாட்டார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்.
46. (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான்.
47. ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.
48. ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
49. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்).
50. (நபியே) கூறுவீராக: ‘‘அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வந்தால் (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?''
51. ‘‘(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதை நம்புவதில் பயன் ஒன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!'' (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்.)
52. பிறகு, இந்த அநியாயக்காரர்களை நோக்கி ‘‘நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது'' என்றும் கூறப்படும்.
53. (நபியே!) ‘‘அது உண்மைதானா?'' என்று அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: ‘‘மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.''
54. அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
55. (மனிதர்களே!) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதை நம்புவதில்லை.
56. அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
57. மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன.
58. ‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது'' என்றும் (நபியே!) கூறுவீராக.
59. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!
60. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவன். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
61. நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதிய போதிலும், (உங்கள் காரியங்களில்) நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.
62. (நம்பிக்கையாளர்களே!) ‘‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''.
63. அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்.
64. இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
65. (நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
66. வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவற்றையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தைதவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே!
67. நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
68. அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா?
69. ‘‘எவர்கள் அல்லாஹ்வின் மீது (இப்படி) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையமாட்டார்கள்'' என்று (நபியே!) கூறிவிடுவீராக.
70. (இவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. பின்னர், (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடினமான வேதனையை சுவைக்க வைப்போம்.
71. (நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்.
72. பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்.)
73. (எனினும்,) அவர்களோ அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எப்படி ஆயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
74. அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.
75. இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் (நம் தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம் கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள்.
76. அவர்களிடம் நம் உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது ‘‘நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்'' என்று கூறினார்கள்.
77. அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்.
78. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்கள் என்று) நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறினார்கள்.
79. பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) ‘‘சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டான்.
80. (பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்.
81. (அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.
82. ‘‘நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (அதைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே'' என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்.)
83. (இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்.
84. மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்.
85. அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்.
86. (எங்கள் இறைவனே!) ‘‘நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!'' (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
87. (ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக.
88. மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்.
89. அதற்கு (இறைவன், ‘‘மூஸாவே ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (மார்க்கத்தில்) உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்'' என்று கூறினான்.
90. இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
91. (அதற்கும் நாம் அவனை நோக்கி,) ‘‘இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரை நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒருவனாகவே இருந்தாய்.
92. எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன் உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்'' (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம் அத்தாட்சிகளைப் பற்றி பராமுகமாயிருக்கின்றனர்.
93. நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
94. (நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
95. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களுடன் நீர் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
96. நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உமது இறைவனுடைய தீர்ப்பு ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
97. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.)
98. தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்.
99. (நபியே!) உமது இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா?
100. எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை அவன்ஆக்கி விடுகிறான்.
101. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை (சிறிது) கவனித்துப் பாருங்கள்'' எனக் கூறுவீராக. எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம் வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் ஒரு பயனுமளிக்காது.
102. (நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி ‘‘அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுவீராக.
103. (அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம் தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.
104. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப்பட்டுள்ளேன்.
105. (நபியே!) உறுதியுடையவராக நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்.
106. ஆகவே, உமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
107. அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
108. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை.
109. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றி வருவீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பீராக. தீர்ப்பளிப்பவர்களில் அவன்தான் மிக்க மேலானவன்.