ترجمة معاني سورة الحجرات باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
காஃப், கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்)
آية رقم 2
நம்பிக்கையாளர்களே! நபியின் சப்தத்திற்கு மேல் உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்! உங்களில் சிலர் சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக.
آية رقم 3
நிச்சயமாக தங்கள் சப்தங்களை (-குரல்களை) அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்பவர்கள் -அவர்களுடைய உள்ளங்களைத்தான் இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து தேர்வு செய்துள்ளான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
آية رقم 4
நிச்சயமாக (நீர் தங்கி இருக்கின்ற) அறைகளுக்குப் பின்னால் இருந்து உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள் - அவர்களில் அதிகமானவர்கள் (உங்கள் கண்ணியத்தை) அறியமாட்டார்கள்.
آية رقم 5
நீர் (அறைகளை விட்டு) வெளியேறி அவர்களிடம் வருகின்ற வரை அவர்கள் பொறுமையாக (எதிர்பார்த்து) இருந்திருந்தால் அது அவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
آية رقم 6
நம்பிக்கையாளர்களே! உங்களிடம் பாவியான ஒருவர் (ஒரு கூட்டத்தைப் பற்றி) ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் (அந்த செய்தியைப் பற்றி) நன்கு தெளிவு பெறுங்கள்! (-அவசரப்படாமல், செய்தியை உறுதிசெய்து கொள்ளுங்கள்!) ஒரு கூட்டத்திற்கு (அவர்களைப் பற்றி சரியாக) அறியாமல் நீங்கள் சேதமேற்படுத்திவிடாமல் இருப்பதற்காக. (அப்படி செய்யவில்லையென்றால்) நீங்கள் செய்ததற்காக வருந்தியவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
آية رقم 7
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார். காரியங்களில் அதிகமானவற்றில் அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் சிரமப்பட்டு விடுவீர்கள். என்றாலும் அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கினான்; உங்கள் உள்ளங்களில் அதை அலங்கரித்தான்; இறை நிராகரிப்பையும் பாவத்தையும் (தூதருக்கு) மாறு செய்வதையும் உங்களிடம் அவன் வெறுப்பாக்கினான். இத்தகையவர்கள்தான் சத்தியவழி நடப்பவர்கள் ஆவார்கள்.
آية رقم 8
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அருளாகவும் கிருபையாகவும் (அவன் உங்களுக்கு ஈமானை நேசமாக்கி குஃப்ரை வெறுப்பாக்கி வைத்தான்). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
آية رقم 9
நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விருவருக்கும் மத்தியில் சமாதானம் செய்யுங்கள்! அவ்விருவரில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது எல்லை மீறினால் எல்லை மீறுகின்றவர்களிடம் சண்டை செய்யுங்கள் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் திரும்புகின்றவரை. அவர்கள் திரும்பிவிட்டால் அவ்விருவர்களுக்கும் மத்தியில் நீதமாக சமாதானம் செய்யுங்கள்! இன்னும் நேர்மையாக இருங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நேர்மையாளர்களை நேசிக்கின்றான்.
آية رقم 10
நம்பிக்கையாளர்கள் எல்லாம் சகோதரர்கள் ஆவர். ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்யுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்.
آية رقم 11
நம்பிக்கையாளர்களே! ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை பரிகாசம் செய்ய வேண்டாம் அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். பெண்களும் (மற்ற) பெண்களைப் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களை (-உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாக) குத்திப் பேசவேண்டாம். தீய பட்டப் பெயர்களைக் கொண்டு பட்டப்பெயர் சூட்டாதீர்கள். (நம்பிக்கையாளர்களை பாவிகள் என்று அழைக்காதீர்கள்!) நம்பிக்கை கொண்டதன் பின்னர் பெயர்களில் மிக கெட்டது பாவிகள் (என்ற பெயர்) ஆகும். (ஆகவே, யாரையும் அப்படி அழைக்காதீர்கள்!) யார் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர்.
آية رقم 12
நம்பிக்கையாளர்களே! எண்ணங்களில் அதிகமானவற்றை தவிர்த்து விடுங்கள்! நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். (பிறர் குறைகளை) ஆராயாதீர்கள்! உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் இறந்த நிலையில் உள்ள தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை நீங்கள் வெருப்பீர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை (ஒருவர் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை) அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
آية رقم 13
மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். உங்களை பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் நாம் ஆக்கினோம். நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் ஒருவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
آية رقم 14
கிராமத்து அரபிகள், “நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை.” என்றாலும் “நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்” என்று கூறுங்கள்! உங்கள் உள்ளங்களில் ஈமான் (இதுவரை) நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்தால் உங்கள் (நல்ல) செயல்களில் எதையும் அவன் உங்களுக்கு குறைக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
آية رقم 15
நம்பிக்கையாளர்கள் எல்லாம் எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டு, பிறகு சந்தேகிக்காமல், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்களோ அவர்கள்தான். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள்.
آية رقم 16
(நபியே!) கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்விற்கு உங்கள் நம்பிக்கையை அறிவிக்கின்றீர்களா? அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 17
அவர்கள் (-அந்த கிராமத்து அரபிகள்) தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை உம்மீது உபகாரமாக கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (ஈமானில்) உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் இஸ்லாமை (நீங்கள்) என் மீது (செய்த) உபகாரமாக கூறாதீர்கள். மாறாக, அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரமாகக் கூறுகின்றான் அவன் உங்களுக்கு ஈமானின் பக்கம் நேர்வழி காட்டியதற்காக.
آية رقم 18
நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், இன்னும் பூமியின் மறைவான விஷயங்களை நன்கறிவான். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
تقدم القراءة