110. பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
الترجمة التاميلية
إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱذۡكُرۡ نِعۡمَتِي عَلَيۡكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذۡ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلۡقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗاۖ وَإِذۡ عَلَّمۡتُكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَۖ وَإِذۡ تَخۡلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ بِإِذۡنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِيۖ وَتُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ بِإِذۡنِيۖ وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ وَإِذۡ كَفَفۡتُ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ عَنكَ إِذۡ جِئۡتَهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ், “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதுமுள்ள என் அருளை நினைவு கூர்வீராக! என்று கூறிய சமயத்தை, நினைவு கூருங்கள்! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர், இன்னும் எழுதுவதையும் ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக! நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும்; பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வர, அவர்களில் நிராகரித்தவர்கள் இது தெளிவான சூனியம் தவிர வேறல்ல என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
الترجمة التاميلية - عمر شريف