ﮐ
surah.translation
.
من تأليف:
عبد الحميد الباقوي
.
ﰡ
1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.
2. நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்). அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
4. நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.
5. (அநாதைகளின் பொருளுக்குப் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக!
6. மேலும், அநாதை(ச் சிறுவர்களுக்கு நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து அவர்)களைச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக்கூடிய) அறிவை (திறமையை) அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய செல்வங்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு அழித்து விடாதீர்கள். (அநாதைகளின் பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (அநாதையின் செல்வங்களிலிருந்து தனக்காக எதையும் பயன்பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவன். (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.)
7. (இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.
8. (பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்.
9. எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்.
10. எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.
11. உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
12. உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்குப் பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்). அதுவும் அவர்களுடைய மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்து விட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்). உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாசனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து, (அவர்களுக்கு) ஒரே ஒரு சகோதரன் அல்லது ஒரே ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு சகோதரனும், சகோதரியும் அல்லது இரண்டு சகோதரர்கள், சகோதரிகள்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாசனம், கடன் ஆகியவற்றைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்கவேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன், பொறுமையுடையவன் ஆவான்.
13. இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
14. எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவன் ஏற்படுத்திய சட்டவரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.
15. உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.
16. உங்கள் ஆண்களில் இருவர் மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காக) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்துகொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
17. எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
18. எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
19. நம்பிக்கையாளர்களே! ஒரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்.
20. ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?
21. அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!
22. முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
23. உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்துவிட்டவற்றைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
24. கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவர்களோடு வீடு கூடிவிட்டீர்களோ அவர்களுக்கு குறிப்பிட்ட ‘மஹரை' அவர்களிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்துவிடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதைக் குறைக்கவோ கூட்டவோ) நீங்கள் இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது ஒரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
25. உங்களில் எவருக்குச் சுதந்திரமான முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கிறான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே, (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும். விபசாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபசாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
26. அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்கள் குற்றங்களை மன்னிப்பதை(யும் உங்கள் மீது அன்பு செலுத்துவதையும்) விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மிக ஞானமுடையவன் ஆவான்.
27. அல்லாஹ்வோ, (நீங்கள் பாவத்திலிருந்து மீண்ட பின்) உங்களை மன்னிப்பதையே விரும்புகிறான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர்.
28. அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
29. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதாக இருக்கிறது!
31. உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.
32. உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33. தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்.
34. (ஆண், பெண் இரு பாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக்கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் திருந்தாவிட்டால்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) ஒரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேலானவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.
35. (கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய உறவினர்களில் ஒருவரையும், அவளுடைய உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, நன்கு கவனிப்பவனாக இருக்கிறான்.
36. அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
37. அவர்கள் (தாங்கள்) கஞ்சத்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கிறார்கள். அந்த நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
38. எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
39. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
40. நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கிறான்.
41. (நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உம்மை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எப்படி இருக்கும்?
42. (இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது.
43. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்.
44. (நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.
45. உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்.
46. யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறி (உமது) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி (‘‘நபியே! நாம் சொல்வதை) நீர் கேட்பீராக. (இனி வேறு எதையும்) நீர் கேட்காதீர்'' என்றும் கூறி ‘ராயினா' என்று நாவைக் கோணி உளறுகின்றனர். (‘ராயினா' என்னும் பதத்திற்கு அரபி மொழியில் ‘எங்களைக் கவனிப்பீராக' என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ ‘மூடனே!' என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உம்மை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உமக்கு) நாம் கட்டுப்பட்டோம். (நாம் சொல்வதை) நீர் கேட்பீராக (என்று கூறி ‘ராயினா' என்னும் பதத்திற்குப் பதிலாக ‘உன்ளுர்னா') ‘எங்களை அன்பாக நோக்குவீராக' என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
47. வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.
48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்.
49. (நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
50. (நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கிறது.
51. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.
52. இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.
53. இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கிறதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
54. அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
55. அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.
56. எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
57. (அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்.
58. (நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
59. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்.
60. (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்.
61. ‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்.
62. (நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பின்னர், அவர்கள் உம்மிடமே வந்து ‘‘(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் விரும்பியே தவிர, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை'' என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.
63. இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக.
64. அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
65. உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.
66. நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.
67. அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேலும், மகத்தான கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்.
68. மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம்.
69. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்.
70. இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்தான் நிறைவான அறிஞனாக இருக்கிறான்.
71. நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள்.
72. (போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்.
73. அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்.
74. மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
75. பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.
76. (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் என்னிக்கையைப் பார்த்து தயங்கி விடாதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது.
77. உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து ‘‘எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா?'' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். (இதற்கு நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!
79. மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்.
80. எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்.ஆகவே, (நபியே! உம்மை) எவர்களும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.
81. (நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
82. இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்.
83. பயத்தையோ (பொது மக்களின்) பாதுகாப்பையோ பற்றிய ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், தங்கள் அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அவர்களில் ஊகிக்கக்கூடிய (ஆராயக்கூடிய அ)வர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
84. (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவீராக. நீர் உம்மைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுவீராக. நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
85. எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கிறான்.
86. (எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
88. (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுவிட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகிறீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவரை அல்லாஹ் வழிதவற விட்டு விட்டானோ அவருக்கு (மீட்சி பெற்றுத் தர) ஒரு வழியையும் நீர் காணமாட்டீர்!
89. (நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களைவிட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் வெளியே புறப்படும் வரை நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்ட இடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக்கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
90. (ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப்பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்)தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றிகொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் வைக்கவில்லை.
91. (நம்பிக்கையாளர்களே!) வேறுசிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதுடன் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இவர்களிடம் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம்.
92. தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் ஓர் இறை நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொலை செய்து விட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறை நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்த வேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
93. எவனேனும் ஒரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் நீண்ட காலம் தங்கி விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம்கொண்டு அவனை சபித்துவிடுவான். இன்னும் மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
95. நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கிறான்.
96. (இன்னும், அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
97. எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
98. எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால்...
99. அவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, பிழை பொறுப்பவனாக இருக்கிறான்.
100. (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
101. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்தால் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் தொழுகையை ‘கஸ்ர்' செய்வது (சுருக்கிக் கொள்வது) உங்கள் மீது குற்றமாகாது. ஏனெனில், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.
102. (நபியே! போர் முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கைகளில்) தங்கள் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) ‘ஸஜ்தா' செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினால் அல்லது நீங்கள் நோயாளிகளாகவோ இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் (கைகளில் பிடிக்க முடியாவிட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
103. (நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி ‘திக்ரு' செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது.
104. எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் வலியை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் வலியை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்!.
106. (இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
107. (நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
108. இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்.
109. நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்?
110. எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்.
111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
112. எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.
113. (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உம் மீது இல்லாதிருந்தால் (நீர் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்தவிதத்திலும்) உம்மை வழி கெடுத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்கவில்லை. அவர்கள் உமக்கு கொஞ்சமும் தீங்கிழைத்துவிட முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம் மீது இறக்கி நீங்கள் அறியாத அனைத்தையும் உமக்குக் கற்பித்திருக்கிறான். உம் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கிறது.
114. (நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.
115. எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.
116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்.
117. அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை.
118. அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் ‘‘உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறினான்.
119. அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்.
120. (ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
121. இவர்களின் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
122. எவர்கள் (ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சொர்க்கங்களில் புகுத்துவோம். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
123. (நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான்.
124. ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
125. எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்.
126. வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
127. (நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்.
128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
129. (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்.
130. (சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் மற்றவரிலிருந்து) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கிவிடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
131. (ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் ‘‘அல்லாஹ் ஒருவனையே பயப்படுங்கள்'' என்றே நல்லுபதேசம் செய்திருக்கிறோம். ஆகவே, (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவே. அல்லாஹ் தேவையற்றவனாக, (அனைவராலும்) புகழப்பட்டவனாக இருக்கிறான்.
132. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
133. மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டுவந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையவனாகவே இருக்கிறான்.
134. (நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
135. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் (இத்தவறான) செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
136. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கிறானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கிறான்.
137. எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.
138. (நபியே!) ‘‘நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு'' என்று நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
139. இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை (பெற) விரும்புகிறார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவர்களுக்குரியவை அல்ல.)
140. நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரை நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
141. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) ‘‘நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கைகொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான்.
142. நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
143. இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீர் ஒரு வழியையும் காணமாட்டீர்.
144. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகிறீர்களா?
145. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்.
146. எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கிறார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான்.
147. நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலிகொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
148. அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்.
149. (ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
150. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ,
151. அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்.
152. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக, மிகக் கருணை காட்டுபவனாக இருக்கிறான்.
153. (நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்.
154. அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் ‘தூர்' (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் ‘‘(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்'' என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறிவிட்டனர்.)
155. ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும், ‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப் போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். ஆதலால், (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
156. அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).
157. மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
158. எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
159. வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்.
160. ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்.
161. அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை மறுமையில் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
162. எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.
163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.
164. (இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்.
165. அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சொர்க்கத் தைக்கொண்டு) நற்செய்தி கூறுகிறவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கிறவர்களாகவும் (நாம் அனுப்பிவைத்தோம்). அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
166. (நபியே! இவர்கள் உம்மை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உம்மீது அருளப்பட்ட வேதம் உண்மையானதென்றும் (உமது மேலான தகுதியை) அறிந்தே அதை (உம்மீது அவன்) இறக்கிவைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வே போதுமான சாட்சி ஆவான்.
167. (நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்று விட்டனர்.
168. (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான்.
169. நரகத்தின் வழியைத்தவிர (அதில்தான் அவர்களை செலுத்துவான்.) அ(ந்த நரகத்)தில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே!
170. மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கைகொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்துவிட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)
172. ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்.
173. ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்.
175. ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்.
176. (நபியே!) ‘கலாலா' பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். மேலும், ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவற்றை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.