ﯣ
ترجمة معاني سورة القمر
باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
.
من تأليف:
عبد الحميد الباقوي
.
ﰡ
1. மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.
2. எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதைப்) புறக்கணித்து ‘‘இது சகஜமான சூனியம்தான்'' என்று கூறுகின்றனர்.
3. மேலும், அதை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதை புறக்கணித்தாலும் வரவேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.
4. (இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன.
5. (அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக்கூடியவைதான். எனினும், (அவற்றைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) ஒரு பயனும் அளிக்கவில்லை.
6. ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
7. (அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல்,
8. அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். இது மிக சிரமமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள்.
9. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
10. ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்.
11. ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.
12. மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.
13. நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.
14. அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.
15. நிச்சயமாக நாம் இதை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்து விட்டோம். (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா?
16. எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
17. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
18. ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
19. நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பிவைத்தோம்.
20. அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது.
21. எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
22. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
23. (இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட ஸாலிஹ் நபியையும் நமது) எச்சரிக்கைகளையும் பொய்யாக்கினர்.
24. (பொய்யாக்கியதுடன்) ‘‘நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று சிரமத்திற்குள்ளாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
25. ‘‘நமக்கு மத்தியில் (நம்மை தவிர்த்து) இவர் மீது தானா வேதம் இறக்கப்பட்டது? மாறாக! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்'' (என்றனர்.)
26. பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகு விரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்.
27. (ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீர் பொறுமையாயிருந்து, அவர்களைக் கவனித்து வருவீராக.
28. ‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக.
29. எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்.
30. ஆகவே, எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத் தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க் கூளங்)களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.
32. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
33. லூத்துடைய மக்களும் நம் எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்.
34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்.
35. இது நமது அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
36. (அவர்களை) நாம் பிடித்துக்கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்.
37. மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்.
38. ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது.
39. ஆகவே, எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
40. (மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கிறோம். (இதன் மூலம்) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
41. நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன.
42. நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
43. (மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்துபோன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்கு) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா? அல்லது,
44. ‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா?
45. அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.
46. மாறாக, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணையாகும். அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும்.
47. நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள்.
48. இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி ‘‘(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும்.
49. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கிறோம்.
50. (ஒரு பொருளை நாம் படைக்க நாடினால்) நம் கட்டளை (யெல்லாம்) கண் சிமிட்டுவதைப்போன்ற ஒன்றுதான்.
51. (மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
52. இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர்களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது.
53. சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும்.
54. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள்.
55. அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த பேரரசனிடம் இருக்கிறது.