ترجمة سورة الإنسان

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الإنسان باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,

(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

"உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்).

"எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்" (என்றும் கூறுவர்).

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

"நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று" (என்று அவர்களிடம் கூறப்படும்).

நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.

காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.

நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.

நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.

எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.

அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
Icon