ﯿ

ترجمة معاني سورة الإنفطار باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


வானம் பிளந்து விடும்போது

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

கப்றுகள் திறக்கப்படும் போது,

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.