ترجمة سورة الملك

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الملك باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.

அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.

அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் கூறுவார்கள்; "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை" என்று சொன்னோம்."

இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."

(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.

(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்; றையும் நன்கு தெறிந்தவன்.

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.

அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.

அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.

(நபியே!) நீர் கூறுவீராக: "அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்."

"அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்" என்று கூறுவீராக.

ஆயினும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?" என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.

"இதைப் பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது, தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறும்.

எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.

கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?

(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"

(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
Icon