ترجمة سورة الحاقة

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الحاقة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


நிச்சயமானது.

நிச்சயமானது எது?

அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -

உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).

"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
Icon