ترجمة سورة المدّثر

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة المدّثر باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.

மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.

நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.

அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.

பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.

அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.

அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.

"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)

அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.

(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர

(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

குற்றவாளிகளைக் குறித்து-

"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.

நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.

அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.

அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
Icon