ترجمة سورة الجاثية

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الجاثية باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


ஹா, மீம்.

இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.

(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.

தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.

நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது) மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.

இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்யாகும், எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.

கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.

ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.

எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்Nகு நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.

நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கடடளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.

இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்.

இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதறாகாக அவை அநியாயம் செய்யப்படமாட்டா.

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.

அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்" என்பது தவிர வேறில்லை.

"அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளைவந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.

(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.

"இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்" (என்று கூறப்படும்).

ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹமத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.

ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்).

மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை" என்று கூறப்பட்ட போது; "(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்" என்று நீங்கள் கூறினீர்கள்.

அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

இன்னும், "நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.

நீங்கள் அல்லஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.

ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
Icon