ﰡ
1. நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்.
2. உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்.
3. (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்றுக்கொள்ள போதுமானவன்.
4. எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.
5. ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
6. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
7. (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
8. ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
9. நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
10. உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
11. அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்).
12. ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
13. அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.
14. பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)
15. அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.
16. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
17. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
18. உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
19. (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.
20. (முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
21. எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.
22. நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
23. நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.
24. உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
25. நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
26. (நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.
27. அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
28. நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
29. நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது.
31. உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
32. நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.
33. (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
34. உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
35. நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
36. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
37. (நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
38. அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
39. அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
40. (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
41. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.
42. காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
43. அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
44. (நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
45. நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
46. மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்).
47. ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
48. நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.
49. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.
50. நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
51. (நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.
52. (நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
53. நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.
54. நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்.
55. நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.
56. நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
58. எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.
59. நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
60. (நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
61. அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
63. (நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
64. மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
65. அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாப்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
66. நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்.
67. மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
68. (ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்.
69. நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
70. (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
71. அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
72. நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
73. (அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.