ﰡ
1. (இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்.
2. அவன் வானவர்களுக்கு வஹ்யி கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து ‘‘வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்'' என்று எச்சரிக்கை செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
3. வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவற்றைவிட அவன் மிக்க மேலானவன்.
4. அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான்.
5. (மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்.
6. நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன.
7. மிகச் சிரமத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்கள் பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
8. குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.
9. (மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்.
10. அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் கொண்டே புற்பூண்டுகளும் (வளர்ந்து) இருக்கின்றன. அதிலே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கிறீர்கள்.
11. அதைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
12. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13. பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவை விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவையாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
14. அவன்தான் நீங்கள் சுவையான மீன் மாமிசங்களை (சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக!
15. உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். (உங்கள் போக்குவரத்துக்காக) ஆறுகளையும் நேரான வழிகளை அறிவதற்காகப் பல பாதைகளையும் அமைத்தான்.
16. (பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் எனும்) அடையாளங்களை அமைத்தான். (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.
17. (இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா? இவ்வளவுகூட நீங்கள் நல்லுனர்வு பெற வேண்டாமா?
18. அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
19. நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
20. (நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) படைக்கப்பட்டவையாகும்.
21. (அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?)
22. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
23. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை.
24. (நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கினான்'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘‘(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள்தான்'' என்று கூறுகின்றனர்.
25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமைகளை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?
26. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது.
27. பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி ‘‘நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்பான். அச்சமயம் (இதை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் ‘‘இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்தவர்கள்மீதுதான்'' என்று கூறுவார்கள்.
28. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் பொழுது (அவர்கள்) ‘‘நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென வானவர்களிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு வானவர்கள்) ‘‘மாறாக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிவான்'' (என்று பதிலளிப்பார்கள்).
29. (மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
30. இறையச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கி வைத்தான்'' என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், ‘‘நன்மையையே (இறக்கி வைத்தான்)'' என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறையச்சமுடையவர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது!
31. (அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்.
32. இவர்களின் உயிரை வானவர்கள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) ‘‘ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.
33. (அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
34. ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
35. இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்.'' இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்கள்மீது (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.)
36. (பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
37. (நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பிய போதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை.
38. (நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அப்படி இல்லை; (‘‘உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான்'' என்று) நான் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
39. (இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக் கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அப்படி அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டல்ல.)
40. (ஏனென்றால்) நாம் ஒரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் ‘‘ஆகுக!'' என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது.
41. (நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
42. இவர்கள்தான் (சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள்.
43. (நபியே!) உமக்கு முன்னர் வஹ்யி அறிவித்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தான். ஆகவே, (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இதை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக.)
44. அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்). அப்படியே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம்மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்பீராக. (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.
45. தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்கின்ற இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
46. அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் அச்சமற்றிருக்கின்றனரா? (அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து) இவர்கள் (தப்பி ஓடி அவனைத்) தோற்கடித்துவிட மாட்டார்கள்.
47. அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய ஒரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக்கொள்ள மாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றனரா? (அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (ஆதலால்தான், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.)
48. அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.
49. வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
50. அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர்.
51. (மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்கள்) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒர் இறைவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம்.)
52. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் பயப்படுகிறீர்கள்?
53. உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான். உங்களை ஒரு தீங்கு அணுகும் போது அவனிடமே முறையிடுகிறீர்கள்.
54. பின்னர், அவன் உங்களை விட்டு அத்தீங்கை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணை வைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர்.
55. நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் (நன்மைகளையும்) நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால், அவர்களை நோக்கி, ‘‘இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்து கொள்வீர்கள்'' (என்று நபியே! கூறுவீராக).
56. நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
57. (நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும்.தங்களுக்கு தாங்கள் விரும்புகின்றவர்களை (ஆண் பிள்ளைகளை) ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவனோ (இதைவிட்டு) மிக்க பரிசுத்தமானவன்.
58. அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்.
59. (பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் “அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?' என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராமல் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா?
60. (இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
61. மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
62. தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் குழந்தை)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும்இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தான் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை.
63. (நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாவான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.
64. (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம் மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
65. அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழைய பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
66. (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற தூய பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது.
67. பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
68. உமது இறைவன் தேனீக்கு, ‘‘நீ மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்'' என அறிவூட்டினான்.
69. பின்னர் ‘‘நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளை இட்டான்). இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
70. உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனத்தை தருகின்ற முதுமை வரை வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டும் என்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவன் ஆவான்.
71. உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?
72. உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் படைக்கின்றான். உங்களுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறான். மேலும், (இப்படியிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவற்றை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்கின்றனரா?
73. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் அற்றவை; ஆற்றலும் அற்றவை.
74. ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உவமைகளாக ஆக்காதீர்கள். (அல்லாஹ்வுக்குரிய தன்மைகளை) நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
75. அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை.
76. இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய சக்தியற்றவர். அவர் தன் எஜமானருக்குச் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) நன்மை எதையும் அவர் செய்வதில்லை. மற்றொருவரோ (நல்லதை அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவுகிறார். இவருக்கு (ஊமையாகிய) அவர் சமமாவாரா?
77. வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமை மூடி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன் ஆவான்.
78. ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இதயங்களையும் (அறிவையும்) கொடுத்தவன் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
79. ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) மிதந்தவையாக நிற்க வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
80. உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்திருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்குகின்ற சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடைபோன்ற) பற்பல பொருள்களை தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவற்றையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அந்த பொருள்கள்) ஒரு காலம்வரை உங்களுக்கு பயன்படுகின்றன.
81. அவன் படைத்திருப்பவற்றில் நிழல் தரக்கூடியவற்றையும் உங்களுக்காக அமைத்திருக்கிறான். மலை(க் குகை)களில் உங்களுக்குத் தங்குமிடங்களையும் அமைத்தான். வெப்பத்தையும் (குளிரையும்) உங்களுக்குத் தடுக்கக்கூடிய சட்டைகளையும், (கத்தி, அம்பு போன்ற) ஆயுதங்களைத் தடுக்கக்கூடிய கேடயங்(கள் செய்யக்கூடிய பொருள்)களையும் அவனே உங்களுக்காக அமைத்தான். அவன் தன் அருளை இவ்வாறே உங்கள் மீது முழுமையாக்குகிறான். (இதற்காக) நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
82. (ஆகவே, நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால் நம்) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதும் கடமையாகும்.
83. அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அதை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.
84. ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது.
85. இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது.
86. இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்.
87. பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்கள் என்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள்.
88. (எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.
89. (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களில் இருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கின்ற நாளில், உம்மை (உமக்கு முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டுவருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் பணிந்து கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது.
90. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்.
91. நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான்.
92. (மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிட வேண்டாம். அவள் மிக சிரமப்பட்டு நூற்ற நூலை, தானே பிரித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். மேலும், ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கிறீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான்.
93. அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவீர்கள்.
94. உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற (உங்கள்) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்.
95. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்.
96. உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
97. ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
98. (நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!.
99. எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு ஓர் அதிகாரமும் இல்லை.
100. அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களிடமுமே செல்லும்.
101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக நீர் பொய்யர்'' என்று கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எந்தக் கட்டளையை, எந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.
102. மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) கூறுவீராக!. (இந்த குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது.
103. (நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.)
104. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
105. (இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தான். (உண்மையில்) இவர்கள்தான் பொய்யர்கள்.(நபியே! நீர் பொய்யரல்ல.)
106. (ஆகவே,) எவரேனும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவனை நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும். அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இப்படி செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
107. ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கின்ற (இத்தகைய) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.
108. இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்.
109. மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தான் என்பதில் ஒரு ஐயமுமில்லை.
110. (நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல சிரமங்களையும்) சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உமது இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவன் (அவர்கள் மீது) கருணையுடையவன் ஆவான்.
111. ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
112. ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர் வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக அணிவித்து அவர்கள் அதைச் சுவைக்கும்படிச் செய்தான்.
113. (நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது.
114. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்.
115. (புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்.
116. உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.
117. (இவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
118. (நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவற்றை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவற்றைத் தடுத்துக்கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
119. (நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னித்து, மிகக் கருணை காட்டுவான்.
120. நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.
121. இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான்.
122. (ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருப்பார்.
123. ஆகவே, (நபியே!) நீர் மிக்க உறுதியோடு மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தை மிகுந்த பற்றுடையவராக பின்பற்றும்படி உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை.
124. சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப்பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றைப் பற்றித் தீர்ப்பளிப்பான்.
125. (நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.
126. (நம்பிக்கையாளர்களே! உங்களைத் தாக்கியவர்களை) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் தாக்கக் கருதினால் உங்களை அவர்கள் தாக்கிய அளவே அவர்களை நீங்கள் தாக்குங்கள். (அதற்கு அதிகமாக அல்ல. தவிர, உங்களைத் தாக்கியதை) நீங்கள் சகித்துக் கொண்டாலோ அது சகிப்பவர்களுக்கு மிக நன்றே!
127. ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்.
128. நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான்.