ﰡ
1. அலிஃப் லாம் மீம் ஸாத்.
2. (நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்.
3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்.
4. (பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும் பொழுது நம் வேதனை அவர்களை வந்தடைந்தது.
5. அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்களால் கூறமுடியவில்லை.
6. ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.
7. (அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.
8. (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
9. எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்.
10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் (நீங்கள்) வாழ்வதற்குத் தேவையான காரணங்களை உங்களுக்கு ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு.
11. நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.
12. (ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்.
13. (அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
14. (அதற்கு இப்லீஸாகிய) அவன் (‘‘இறந்தவர்களை) எழுப்பும் நாள்வரை எனக்கு அவகாசம் அளி'' என்று கேட்டான்.
15. (அதற்கு இறைவன்) ‘‘நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்'' என்று கூறினான்.
16. (அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) ‘‘நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்'' (என்றும்)
17. ‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான்.
18. (அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்.
19. (பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.)
20. (எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்,
21. ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,
22. அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.
23. (அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
24. (அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்'' என்று கூறினான்.
25. ‘‘அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்'' என்றும் கூறினான்.
26. ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
28. (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக.
29. ‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக.
30. (உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தினான். மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டது. அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர்.
31. ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
32. (நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
33. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்).
34. ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
35. ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.
36. (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.
38. (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்.
39. அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்.
40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
41. நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
42. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்றவரை) நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இவர்கள் தான் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
43. (இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.
44. (அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!''
45. (ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதைக் கோணலாக்க விரும்பினார்கள். அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’
46. (நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
47. இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
48. அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
49. (அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்).
50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள்.
51. இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.
52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
53. (மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.
54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.
55. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவற்றைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
56. (மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்யாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.
57. அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பிவைக்கிறான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர், அதை (வரண்டு) இறந்து விட்ட பூமியின் பக்கம் நாம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கிறோம். பின்னர், அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
58. (ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
60. அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
61. அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்.
62. ‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.
63. உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கிறது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்'' (என்றும் கூறினார்.)
64. பின்னும், அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால், அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம் வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காணமுடியாத) குருடர்களாகவே இருந்தனர்.
65. ‘ஆத்' (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
66. அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்.
67. அதற்கு அவர் ‘‘என் மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதரே!'' என்று கூறினார்.
68. ‘‘என் இறைவனின் தூதுகளையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கிறேன்.
69. உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து, தேகத்திலும் (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்'' (என்றும் கூறினார்).
70. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
71. அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்.
72. ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்தவர்களை வேரறுத்து விட்டோம்.
73. ‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
74. ‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்.)
75. அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்.
76. அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பியவற்றை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்று கூறினர்.
77. ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
78. ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர்.
79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்.
80. லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?
81. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
82. அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகிவிடலாமெனப் பார்க்கின்றனர்'' என்றுதான் பதில் கூறினார்கள்.
83. ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்.
84. அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
85. ‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார்.
86. ‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!'' (என்றும் கூறினார்).
87. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.
88. (ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்.
89. ‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்).
90. (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள்.
91. ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.
92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்.
93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.
94. நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.
95. பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்.
96. அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
97. (நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
98. அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
100. பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.
101. (நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
102. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
103. இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
104. மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார்.
105. ‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்.)
106. அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
107. ஆகவே, (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப் பாம்பாகி விட்டது.
108. மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.
109. (இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள்.
110. (அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்.)
111. அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை.
112. அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்.
114. அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான்.
115. (பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர்.
116. அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.
117. அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.
118. இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.
119. ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.
120. அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
121. ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்.
122. மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.)
123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
124. நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
125. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்.
126. ‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)
127. அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்.
128. (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்.
129. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்.
130. பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சத்தைக் கொண்டும் (அவர்களுடைய விவசாய) விளைச்சல்களில் நஷ்டத்தைக் கொண்டும் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.
131. எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
132. இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
133. ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.
134. அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
135. நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.
137. இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
139. (அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்.)
140. (தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார்.
141. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்.
143. நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார்.
144. (அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்.
145. (நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்).
146. நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.
147. ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
148. (தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.
149. அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
150. (இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்.
151. (பிறகு மூஸா இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன் அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன்'' என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
152. (பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
153. (எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்.
154. மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.
155. மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.
156. மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்.
157. (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
158. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
159. மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.
160. மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
161. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
162. அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்.
163. (நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக. (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.
164. (இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்.
165. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
166. ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)
167. (நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
168. அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
169. அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?
170. எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
171. தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
172. (நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,
173. அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
174. அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.
175. (நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.
176. நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.
177. நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
178. அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே!
179. நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்.
180. அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்.
181. நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
182. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.
183. (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக என் சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)
184. (நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.
185. வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
186. எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்.
187. (நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.''
188. (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.''
189. ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
190. (அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
191. ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்.
192. அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
193. நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.
194. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!
195. (சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
196. ‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்.
197. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
198. நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை.
199. (நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக.
200. ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.
202. எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை.
203. (அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.
204. (மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.
205. (நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்!
206. எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.