ترجمة سورة الطارق

الترجمة التاميلية
ترجمة معاني سورة الطارق باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
2. (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
3. (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
4. ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
5. ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
6. குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
8. (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
9. என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
10. (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
11. மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
12. (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
13. மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
14. இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
15. (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
16. நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
17. ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
Icon