ترجمة سورة الحجرات

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الحجرات باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.

முஃமினகளே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.

நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.

(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!

நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.

(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

"நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

"நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்" என்று (நபியே!) நீர் கூறும்.

அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

"நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
Icon