ترجمة سورة الشورى

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الشورى باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


ஹா, மீம்.

ஐன், ஸீன், காஃப்.

(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.

அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.

அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.

அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.

(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.

நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்

வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக.

எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.

அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?

அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.

அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.

ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.

அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.

அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.

அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.

அவர்கள் நிராசையான பின்னர் மறையை இறக்கி வைப்பவன் அவனே மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.

இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.

இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.

அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.

ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.

அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.

ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.

"இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.

மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்) கடைக்ககண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; "எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்." அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.

(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.

(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.

(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.
Icon