187. (நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், ஒரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள் மீது இரக்கமுற்று உங்கள் சிரமத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும்வரை (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவற்றைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்று) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) மஸ்ஜிதுகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நெருங்காதீர்கள். மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்.
الترجمة التاميلية
أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் சேர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் பிழை பொறுப்பை ஏற்று உங்களை மன்னித்தான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் சேருங்கள்; அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதைத் தேடுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள். பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (மனைவிகளுடன்) சேராதீர்கள். இவை அல்லாஹ்வுடைய (தடை) சட்டங்களாகும். எனவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்குத் தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக.
الترجمة التاميلية - عمر شريف