ترجمة سورة المرسلات

الترجمة التاميلية
ترجمة معاني سورة المرسلات باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
3.(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
8. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
13. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
14. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
17. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
24. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
27. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
28. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
29. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.
30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).
31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.
33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
34. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
37. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
40. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.
45. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
48. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
50. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!
Icon