ترجمة سورة نوح

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة نوح باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.

"என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.

"அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.

"(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்" (என்றும் கூறினார்).

பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.

"ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.

"அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.

"பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.

"அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.

மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.

"(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.

"அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

"உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.

"நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.

"ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

"இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

"அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.

"பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.

"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (என்றும் போதித்தார்).

நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.

"மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்."

மேலும் அவர்கள்; "உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் சொல்கின்றனர்.

"நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே."

ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.

அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.

"நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.

"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).
Icon