ترجمة سورة عبس

الترجمة التاميلية
ترجمة معاني سورة عبس باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
Icon