ترجمة سورة القيامة

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة القيامة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

ஆகவே, பார்வையும் மழுங்கி-

சந்திரன் ஒளியும் மங்கி-

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
Icon