ترجمة سورة المؤمنون

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة المؤمنون باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.

பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.

பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.

அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுது பராமுகமாக இருக்கவில்லை.

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.

அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.

இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.

மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.

இன்னும்; நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) "என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" என்று கூறினார்.

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; "இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை" என்று கூறினார்கள்.

"இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்" (எனவும் கூறினர்).

"என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!" என்று கூறினார்.

அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.

"நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; "அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவீராக!

மேலும் "இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).

நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன் நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.

பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.

அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். "அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" (என்றும் அவர் கூறினார்.)

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.

எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!

"நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?

"(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)

"நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்டப் போகிறவர்கள் அல்ல.

"இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை எனவே இவரை நாம் நம்பமாட்டோம்" என்று (கூறினர்).

"என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!" என்று கூறினார்.

"சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்" என்று கூறினார்.

அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலோ ஆகிவிட்டார்கள்.

அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.

எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்க முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராகக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசம் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.

பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்

ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.

எனவே "நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!" எனக் கூறினர்.

ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.

(தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.

மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.

(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) "தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)

"இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சங்கள்" (என்றும் கூறினோம்).

ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.

எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?

அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.

நிச்சயமாக, எவாகள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-

இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்

இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-

இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-

இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.

நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.

ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.

(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.

"இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.

ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).

(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?

அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?

அல்லது, "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.

இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.

அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.

மேலும், நிச்சயமாக நீர் அவர்களை ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.

இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.

ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.

திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை தாழ்ந்து பிரார்; த்திக்கவுமில்லை.

எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.

மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.

அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?

மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.

"நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?" என்று அவர்கள் கூறினார்கள்.

"மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை" (என்றும் கூறிகின்றனர்).

'நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக!

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள்; "(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக!

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக.

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள்; "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக!

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக.

அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக.

எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.

அவன் மறைவனதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.

(நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்;

"என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக" என்று.

இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.

(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.

இன்னும்; நீர் கூறுவீராக! "என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்" (என்றும்)

'இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்' (என்று கூறுவீராக)!

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான்.

"நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.

(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.

"என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்)

"எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்" என்று அவர்கள் கூறுவார்கள்.

"எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!" (என்றும் கூறுவர்.)

(அதற்கவன்) "அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!" என்று கூறுவான்.

நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் "எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.

அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.

நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!"

"ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான்.

"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள்.

"ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான்.

"நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.)

ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!

மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.

இன்னும், "என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்" என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
Icon