ترجمة سورة الذاريات

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة الذاريات باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!

(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,

பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.

அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.

அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.

அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.

(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.

நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).

"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.

அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.

ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.

இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).

எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.

அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.

(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.

பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.

(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.

(பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார்.

"குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.

"அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-

"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."

ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.

எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.

நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.

மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது

அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.

ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.

இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது

(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.

மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது

அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.

அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.

மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.

இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).

மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).

இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.

ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.

மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.

ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
Icon