ترجمة سورة النازعات

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة النازعات باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;

அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.

"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"

"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.

ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."

இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.

"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.

இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

எனவே, எவன் வரம்பை மீறினானோ -

இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
Icon